பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியது..


      
Published on: 10th May 2024 03:03 AM

பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியது..

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸும், 12 ரன்கள் எடுத்திருந்த வில் ஜெக்ஸும் அடுத்தடுத்து அறிமுக வீரர் வித்வாத் கவெரப்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். அவருக்கு துணையாக விராட் கோலியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜத் பட்டிதார் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த ராஜத் பட்டிதார் ஆட்டமிழக்க, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் தாமதமானது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்திலும் தனது அதிரடியைக் கைவிடாத விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 600 ரன்களையும் தாண்டினார். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 92 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 18 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மஹிபால் லாம்ரோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 46 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைச் சேர்த்தது.

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு துணையாக ஜானி பேர்ஸ்டோவும் ஒருசில பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரைலீ ரூஸோவ் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக ஷஷாங்க் சிங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்த நிலையில் ரைலீ ரூஸோவ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மாவும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். 

பின்னர் ஷஷாங்க் சிங்குடன் இணைந்த கேப்டன் சாம் கரண் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மறுபக்கம் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஷுதோஷ் சர்மாவும் 8 ரன்களோடு நடையைக் கட்டினார். அர்களைத்தொடர்ந்து 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்திருந்த கேப்டன் சாம் கரணும், ரன்கள் ஏதுமின்றி ஹர்ஷல் படேலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், லோக்கி ஃபெர்குசன், கரண் சர்மா மற்றும் ஸ்வப்நில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்