23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


      
Published on: 20th April 2024 03:57 PM

23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று வெயில் வாட்டி வதைத்தது. வாக்குப்பதிவுக்கு மத்தியில் வெயிலும் கொளுத்தி எடுத்தது. இதனால் ஓட்டு போட வரிசையில் காத்து இருந்த 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். எனினும் நெல்லையில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது. மற்றபடி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் தான் அடித்தது.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. எனினும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலை முதல் வெயிலே அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், நாளையில் இருந்து 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்